11 அடி ஆழம் வரை தூர்ந்துபோய் உள்ளதால் ஆக்கிரமிப்பு முழு கொள்ளளவை எட்டாத காவேரிப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி

காவேரிப்பாக்கம்: முழு கொள்ளளவை எட்டாத நிலையில் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு நிகராக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கு மூலகாரணியாக அமைவது பாலாறு. இந்த ஆற்றில் ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் 799 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் 4,825.20 கனஅடிக்கு தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

இங்கிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு காவேரிப்பாக்கம் ஏரியில் நிரப்பப்படுகிறது. இந்த ஏரியானது நிரம்பி வழியும்போது அதன் முழு கொள்ளளவு 31 அடி உயரம் வரை இருக்கும். அதாவது 41.601 மி.க.லிட்டர் தண்ணீர் நிரம்பி இருக்கும். ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரி மதகு, சிங்க மதகு, மூல மதகு, பள்ள மதகு உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் விவசாயத்திற்கு நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு சுமார் 6,278 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. காவேரிப்பாக்கம் ஏரியானது ஒருமுறை நிரம்பினால் மூன்று போகம் அறுவடை செய்யலாம் என்பது சிறப்பு அம்சமாகும்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 29 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது.

இதைத்தொடர்ந்து, அதன் முழு கொள்ளளவான 31 அடி தண்ணீர் நிரம்பாத நிலையில்,  அதிகாரிகள் கடந்த 6ம் தேதி ஏரியில் உள்ள கடைவாசல் பகுதியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர். இதனால் ஏரி தண்ணீரை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், கடந்த 2017ம் ஆண்டு ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டாமல் திறந்து விடப்பட்டது. இதனால் மூன்று போகம் வரவேண்டிய தண்ணீர் ஒரு போகத்தில் வடிந்துவிட்டது. இதே நிலைமை இந்த ஆண்டும் வந்து விடுமோ? என்ற அச்சம் உள்ளது.மேலும், ஏரியானது சுமார் 11 அடி ஆழம் வரை தூர்ந்துபோய் உள்ளதாகவும், இதனால் ஏரியில் தண்ணீர் விரைவில் வடிந்துபோய் விடுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 2017ம் ஆண்டுக்கு முன்பு ஒருமுறை ஏரி முழுவதும் நிரம்பி வழிந்தபிறகே திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், காவேரிப்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், ஏரியானது அதன் முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருந்து பின்னர் தண்ணீரை திறந்துவிட வேண்டும், தற்போது வெளியேற்றப்படும் தண்ணீரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

* நீரில் மூழ்கிய பயிர்களுக்காக திறப்பா?

பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் காவேரிப்பாக்கம் ஏரி இதுவரையிலும் தூர்வாரப்படாததால் சுமார் 11 அடி ஆழம் வரை தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் தான் ஏரியை சுமார் 500 ஏக்கர் வரை ஆக்கிரமித்து ஏரிக்குள்ளேயே விவசாயம் செய்து வந்தனர். தற்போது ஏரி நிரம்பி உள்ளதால் ஏரிக்குள் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல் மற்றும் வாழை மரங்கள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதற்கிடையே ஓரளவு விளைந்துள்ள வாழை தார்களை அறுவடை செய்து வருகின்றனர். ஏரியில் மூழ்கிய பயிர்களுக்காகவே ஏரியை முழுவதும் நிரம்ப விடாமல் அதிகாரிகள் தண்ணீரை திறந்து வெளியேற்றுகின்றனர் என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே ராணிப்பேட்டை கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு தண்ணீர் திறந்து விடுவதை தடுத்து நிறுத்துவதோடு, வரும் காலங்களில் ஏரியை தூர்வாரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: