சென்னையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு: போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாது கடைபிடிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை போக்குவரத்து போலீசார் எடுத்து வருகின்றனர். ஆனால், பலர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர். குறிப்பாக, செல்போன் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்வது, முகக்கவசம், ஹெல்மெட் அணியாமல் செல்வது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது கடந்து செல்வது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.

இதனால், நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தி, விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதித்தாலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகனஓட்டிகளுக்கு விதிகளை சொல்லிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் உள்ள 4 சாலைகள் சந்திப்புகளில் குறிப்பாக சென்ட்ரல், மெரினா கடற்கரை சாலை, திருவான்மியூர் போன்ற இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், வாகனங்களில் வேகமாக வருபவர்களையும், சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்பவர்களையும் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எடுத்து கூறுகின்றனர். ஒரு வாரத்திற்கு அபராதம் விதிக்காமல் இதுபோன்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன், அதன்பிறகு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை முழுவதும் படிப்படியாக இது அமல்படுத்தப்படும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் சிறந்த நகரமாக சென்னையை உருவாக்க இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: