இன்றுடன் சிறப்பு முகாம் முடியும் நிலையில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு புகார்: ஆயிரக்கணக்கில் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதமே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் புகார் செய்துள்ளனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், கடந்த மாதம் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதையடுத்து, வருகிற 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக, நவம்பர் 21ம் தேதி, 22ம் தேதி மற்றும் டிசம்பர் 12ம் தேதி, 13ம் தேதி ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், அப்போது நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் 21 மற்றும் 22ம் தேதி மற்றும் டிசம்பர் 12ம் தேதி (நேற்று) மூன்று கட்டங்களாக சிறப்பு முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முகாமிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இன்று 4வது மற்றும் இறுதி கட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சிறப்பு முகாமில் அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம், ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம். புதிதாக பெயரை சேர்க்க விரும்புகிறவர்கள் விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவிலான கலர் புகைப்படம், வீட்டு முகவரிக்கான சான்று வழங்க வேண்டும். 18 வயது முதல் 25 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் வயது சான்றிதழுக்கான, கல்வி சான்றிதழின் நகல் வழங்க வேண்டும்.

தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரி பார்க்கப்பட்டு, வருகிற ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் சேர்க்கப்படும். தமிழகத்தில் நேற்று நடந்த, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக வாக்குச்சாவடி ஊழியர்கள் பலரது பெயர்களை போலியாக சேர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள சேவாசதன் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமுக்கு திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டி.ஆர்.பாலு நேற்று திடீரென வந்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் அதிகளவில் இறந்தவர்கள் பெயர்கள் எடுக்கப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களிடம், இந்த கார்டு செல்லாது. நீங்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர். இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பேன்” என்று கூறினார். அதேபோன்று திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்எல்ஏ, விழுப்புரத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விழுப்புரம் தொகுதியில் மட்டும் 89 இடங்களில் ஒரே பெயர், இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது. மரகதபுரத்தை சேர்ந்த அஜித் என்ற நபருக்கு ஒரே ஊரில் 9 இடத்தில் ஓட்டு இருப்பது தெரியவந்துள்ளது” என்றார்.  சேலம் மாவட்டத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக சார்பில் பேசிய மாநகர செயலாளர் ஜெயக்குமார், ‘‘மத்திய மாவட்டத்தில் உயிரிழந்த, இடமாற்றம் மற்றும் இரட்டை பதிவுகள் என 22 ஆயிரம் மனுக்கள் ஆதாரத்துடன் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மானூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் நடராஜன் கூறுகையில், பாளையங்கோட்டை தொகுதியில் மட்டும் 8 ஆயிரம் பேருக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கவில்லை என்றார். நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், குமரி மாவட்டம் - கேரள எல்லைப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரட்டை வாக்காளர்கள் உள்ளனர். இதில் தகுதியற்றவர்களை நீக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியதில் சரியான வழிமுறைகளை பின்பற்றவில்லை. உண்மையான வாக்காளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் நீக்கப்பட்டுள்ளதாக திமுக செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் புகார் தெரிவித்துள்ளார். சென்னையிலும் பல்வேறு இடங்களில் குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் சமீப காலமாக அதிகமானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* தமிழகத்தில் தற்போது 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர்.

* கடந்த மாதம் 21, 22 மற்றும் டிசம்பர் 12ம் தேதி மூன்று கட்டங்களாக நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

* வரும் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் சேர்க்கப்படும்.

Related Stories: