சாலைப்பணியில் ரூ55 கோடி முறைகேடு: முதல்வருக்கு அதிமுகவினர் பகீர் கடிதம்

* ஒப்பந்ததாரர் மீது சரமாரி புகார்

* திருச்சியில் பரபரப்பு

திருச்சி: திருச்சியில் ரூ.55 கோடி சாலைப்பணியில் முறைகேடு நடப்பதாக முதல்வருக்கு அதிமுகவினரே கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி முதல் திண்டுக்கரை வரை சாலையை அகலப்படுத்த ரூ55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஒப்பந்ததாரர் திருக்குமரன் செய்து வருகிறார். ஆனாலும் பணி மிக மெதுவாகவும், தரமின்றியும் நடந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அல்லூர் சீனிவாசன் என்பவர் கேள்வி கேட்டிருந்தார். இதுதொடர்பாக அவரை திருச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தொடர்பு கொண்டு, அலுவலகத்துக்கு வரும்படி அழைத்தார்.

அதன்படி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி அல்லூர் சீனிவாசன், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருடன், கோட்ட பொறியாளர் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒப்பந்ததாரர் திருக்குமரன் அங்கு வந்து, அல்லூர் சீனிவாசனை தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும் ஆபாசமாக திட்டி உள்ளார். பின்னர் காஜாமலையில் சாலை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சுமார் 25 பேரை, மன்னார்புரம் அலுவலகத்துக்கு வரவழைத்தார். இதனால் அல்லூர் சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.

இதுதொடர்பாக, கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரர் திருக்குமரன், கோட்ட பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி  விரிவாக தமிழ்முரசில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட சாலை பணியில் முறைகேடு நடப்பதாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் தமிழக முதல்வருக்கு பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் குடமுருட்டி - ஜீயபுரம் வரை 11 கிமீ சாலையை விரிவாக்கம் செய்ய ரூ55 கோடி ஒதுக்கப்பட்டது.

பணிகள் முறைப்படி நடைபெறாத நிலையில், அதுபற்றி ஒப்பந்ததாரர் திருமுருகனை அணுகி சமூக ஆர்வலர்கள் கேட்ட போது, நான் தான் எம்எல்ஏ தேர்தலில் வேட்பாளர்களுக்கு பணம் தரப்போகிறேன். மக்களை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. பணம் வாங்காமல் எவன் ஓட்டுப்போடுகிறான் என்று மிரட்டுகிறார்.

இந்த பணியில் நடைபெறும் முறைகேடுகள் வருமாறு: திருச்செந்துறை கோயிலுக்கு எதிரில் ஆற்றங்கரையில் தகரத்தை வைத்து மறைத்து அதன்பின்னால் சிமென்ட், ஜல்லி மிக்சர் மெஷினை இறக்கி யாருக்கும் தெரியாமல் ஆற்று மணலை திருடி சிமென்ட், ஜல்லியுடன் கலந்து கலவை தயார் செய்து, தடுப்பு சுவர்களை கட்டியுள்ளனர்.

இந்த திட்டத்தில் ரூ7 கோடி அளவுக்கு எம்சாண்ட் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன்படி பணிகள் நடைபெறவில்லை. ரூ22 கோடியில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டுவதற்கு மூன்றில் ஒரு பங்காவது கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டிய அனுபவம் உள்ள ஒப்பந்ததாரருக்கே முறையாக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முன் அனுபவம் இல்லாத திருக்குமரனுக்கு இந்த ஒப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்தேதியிட்டு ரூ4 கோடியை ஒப்பந்ததாரர் திருக்குமரனுக்கு கண்காணிப்பு ெபாறியாளர் வழங்கி உள்ளார். 75 மிமீ கணத்துக்கு போட வேண்டிய தார்சாலையை 50 மிமீ அளவுக்கு கூட போடவில்லை. இதன் மூலம் அரசு பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது.

இந்த முறைகேடுகளை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசனை திருச்சி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வைத்து தாக்கியதன் மூலம் மல்லாச்சிபுரம், கம்பரசம்பேட்டை, முருங்கப்பேட்டை, முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், திருச்செந்துறை, ஜீயபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு இந்த பிரச்னை போய் விட்டது. இதற்கு காரணம் ஒப்பந்ததாரர் திருக்குமரன். நெடுஞ்சாலைத்துறை சிறப்பு உதவியாளர் செல்வராஜும், திருக்குமரனும் முதல்வரின் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களிடம் 5 சதவீதம் கமிஷன் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

செல்வராஜுன் பினாமி தான் திருக்குமரன் என்றும் கூறப்படுகிறது. எனவே முதல்வர் இதுகுறித்து விசாரித்து நெடுஞ்சாலைத்துறை சிறப்பு உதவியாளர் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் திருக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: