சென்னை மாநகராட்சி எல்லையில் முதற்கட்டமாக 60,000 பணியாளர்களுக்கு தடுப்பூசி

சென்னை, -இந்தியாவில் கோவாக்சின், கோவி ஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் 3வது கட்ட பரிசோதனையில் உள்ளது. மேலும், இவற்றை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கவேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய மருந்துத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளன. இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விரைவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு ஒவ்வொரு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் முன்கள பணியாளர்கள் 5 லட்சம் பேருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில் மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும். இதற்கு அடுத்தகட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக மாவட்ட பணிக்ககுழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான தகவலை சேகரிக்கும் பணி நடைபெற்று வருதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: