நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார்? ஓட்டலுக்கு அமைச்சர் வந்தது ஏன்? நண்பர்கள், கணவரிடம் போலீஸ் விசாரணை

சென்னை: ஓட்டல் அறையில் சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவர் தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியது யார், அவரை யார் யார் சந்தித்தார்கள், கடைசியாக யாருடன் பேசினார் என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த ஓட்டலுக்கு நள்ளிரவில் அமைச்சர் வந்து சென்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28). கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு ஷுட்டிங் முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள ஓட்டல் அறைக்கு தங்குவதற்காக வந்தார். அங்கு நடிகையுடன் நிச்சயதார்த்தம் நடந்த தொழில் அதிபர் ஹேம்நாத்தும் இருந்தார். அப்போது அவரை மட்டும் வெளியில் போகச் சொல்லிவிட்டு அறைக்குள் பட்டுப்புடவையில் தூக்குப்போட்டு சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நடிகை சித்ராவின் கன்னம் மற்றும் தாடையில் காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பல்வேறு நடிகைகளும் இதே கருத்தை தெரிவித்தனர். நடிகையின் தாயாரும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகை சித்ரா, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அவரது தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை துவக்கினர். போலீஸ் விசாரணையில், சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் 4 மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் பெற்றோருக்கு தெரியாமல், கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி சித்ராவும், ஹேம்நாத்தும் பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சித்ராவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்ரா மரணம் அடைவதற்கு முன்பு வரை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்கொலை செய்வது குறித்து எந்தவித பதிவோ, கடிதமோ அவரது அறையில் இல்லை. வாட்ஸ் அப் மற்றும் மெசேஜ் எதுவும் அவரது செல்போனில் இல்லை. இதனால், ஹேம்நாத்துக்கும், சித்ராவுக்கும் இடையே நள்ளிரவில் ஏதாவது பிரச்சனை இருந்ததா அல்லது படப்பிடிப்பில் ஏதாவது பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஓட்டல் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சித்ராவின் செல்போனை கைப்பற்றி அதில் உள்ள தகவல்கள் குறித்தும், யாருடன் கடைசியாக பேசினார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை போலீசில் சித்ராவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் புகார் அளித்திருந்தார். சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் ஹேம்நாத்திடம் நேற்று முன்தினம் தீவிர விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அவரிடம் போலீசார் காலை 9 மணி முதல் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். மேலும், சித்ராவுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகளிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலுக்கு ஒரு அமைச்சரின் கார் வந்து சென்றது, சிசிடிவி கேமராவில் தெரியவந்துள்ளது. அந்த காரில் வந்த அமைச்சர் யார் என்பது தெரியவில்லை.

சென்னையில் கருப்பு எம்ஜிஆர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் நிறைய நடிகைகளுடன் பழக்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், புறநகரில் உள்ள ஓட்டலில் நடிகைகளுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாராம். இதனால் அவர் வந்து சென்றாரா அல்லது அந்த ஓட்டலில் வேறு அமைச்சர் யாராவது தங்கியிருந்து நள்ளிரவில் வெளியேறினாரா, எதற்காக அமைச்சரின் கார் ஓட்டலுக்கு வந்து சென்றது என்பது மர்மமாக உள்ளது. ஆனாலும், நடிகையின் தற்கொலைக்கு யாராவது தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் நடிகையை தற்கொலைக்கு தூண்டியவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ‘அடித்து கொலை செய்துள்ளனர்’

நடிகை சித்ராவின் அம்மா விஜயா செய்தியாளர்களிடம் கூறியது: சித்ராவுடன் எப்போதும் நான் தான் ஷூட்டிங்கிற்கு செல்வேன். வருங்கால கணவர் செல்லும்போது நான் செல்லத் தேவையில்லை என்பதால் உடன் செல்லவில்லை. எனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம். அவரை தண்டிக்க வேண்டும். என் மகள் மிகவும் துணிச்சலானவள், எதற்கும் பயப்படமாட்டாள். இதுபோன்ற சூழ்நிலையில் இருந்த பலருக்கும் தைரியம் சொல்லி, வாழ்வில் அனைத்தும் மாறிவிடும் என்று ஊக்கம் சொல்பவள். எனவே, அவள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை.

Related Stories: