இந்தியா முழுவதும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்; மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்: மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் என மு.க ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் எல்லையில் விவசாயிகள் இன்று 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது. விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பேச்சசுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் டிசம்பர் 14 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். டிசம்பர் 14 ம் தேதி முதல் பாரதிய ஜனதாவுக்கு வருவாய் வழங்கும் அதானி திட்டங்கள், மால்கள், டோல் பிளாசாக்கள் மற்றும் பிற திட்டங்களை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் என மு.க ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியா முழுவதும் விவசாயப் பெருங்குடி மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்!.

கொரோனா காலம் என்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். மக்கள் உரிமைகள் முதல் மாநில உரிமைகள் வரை பட்டப்பகலில் பறிபோய்க் கொண்டு இருக்கிறது. மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம். மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: