உ.பி.யில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டம்: காதலிப்பவர்கள் திருமணம் செய்யவும் உரிமை இல்லையா? - நடிகர் சித்தார்த் ஆவேசம்

நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பதிவுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயலை கடுமையாக விமர்சனம் செய்வது வழக்கம். தற்போது லவ் ஜிஹாதை முன்வைத்து உத்தரபிரதேச மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்தை அவர் விமர்சித்துள்ளார். புதிய சட்டத்தின்படி, வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும். முறையான விசாரணைக்கு பிறகே அனுமதி வழங்கப்படும்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள சித்தார்த், கற்பனை உரையாடலை பகிர்ந்துள்ளார். அதில், ‘அப்பா, நான் ஒருவரை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்று மகள் சொல்ல, உடனே தந்தை, ‘அவன் நம் சமூகத்தை சேர்ந்தவனா?’ என்று கேட்கிறார். மகள், இல்லை என்கிறார். அதற்கு தந்தை, ‘பரவாயில்லை. முதிர்ந்தவனாக நான் உனது காதலை மதிக்கிறேன். உனக்கு என் ஆசிகள். ஆனால், நாம் மாவட்ட நீதிபதியிடம் சென்று அனுமதி பெற வேண்டும். ஒரு வாடகை வாகனத்தை கூப்பிடு’ என்று பதிவு செய்துள்ள சித்தார்த், அதற்கு கீழே, ‘புதிய இந்தியா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சித்தார்த் கூறுகையில், ‘என்ன தைரியம் இருந்தால், வயதுக்கு வந்த ஒரு பெண், தான் யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? எப்படி செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்பார்? எப்படி ஒருவரை காதலிப்பார்? அவர்கள் சட்டத்தின்படி யாருக்கும், எதை செய்யவும் உரிமை இருக்கக்கூடாது. எதையும் சாப்பிடவோ, பேசவோ, பாடவோ, எழுதவோ, படிக்கவோ, எவரையும் திருமணம் செய்துகொள்ளவோ எதற்கும் உரிமை கிடையாது. நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களே தெளிவாக சொல்வார்கள்’ என்று கிண்டலாகவும் ஆவேசமாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: