துணைவேந்தர் சூரப்பா விவகாரம்: விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவேன்: அண்ணா பல்கலை பதிவாளர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசின் விதிமுறைகளை மீறி, அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடிதம் எழுதியது, பல்கலையில் ரூ.200 கோடி நிதி முறைகேடு, பணி நியமனத்தில் ரூ.80 கோடி லஞ்சம் வாங்கியது, ஐஐடியில் பணிபுரிந்து வந்த அவரது மகளுக்கு அண்ணா பல்கலையில் கவுரவ பதவி வழங்கியது என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து,  சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மாதம் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இக்குழுவில் 13 பேர் நியமிக்கப்பட்டனர். மேலும், சூரப்பா மீதான புகார்களை விசாரித்து மூன்று மாதத்தில் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. இதைதொடர்ந்து, சூரப்பா மீது புகார் அளிப்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலமாக, அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட  ஏராளமானவர்கள் புகார் அளித்தனர்.

அதனால் நீதிபதி கலையரசன் புகார் அளிக்க டிச.9ம் தேதி (நேற்று) வரை கால நீட்டிப்பு செய்திருந்தார். அதன்படி நேற்று மாலை வரை சூரப்பா மீதான புகார்கள் வரவேற்கப்பட்டது. இந்தநிலையில், அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தியிடம், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி விசாரணை குழு கேட்டும் ஒப்படைக்காததால் பதிவாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) விசாரணை ஆணையம் கேட்ட ஆவணங்களை பதிவாளர் கருணாமூர்த்தி மூன்று பெட்டிகளில் கொண்டு வந்து சமர்ப்பித்தார். மேலும், நீதிபதி கலையரசன் கூடுதல் ஆவணங்களை இந்தவார இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதன்படி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி இரண்டாவது நாளாக நேற்று ஆவணங்களுடன் நீதிபதி கலையரசன் குழு முன்பு ஆஜரானார்.

அப்போது அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி கூறியதாவது: இனி அடிக்கடி விசாரணைக்காக வருவேன். விசாரணைக்கு நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்பதால், தேவையான ஆவணங்களை ஒப்படைத்துள்ளேன். எப்போது அழைத்தாலும் வருவேன் என கூறியுள்ளார்.  நேற்று, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன் மீது கூறப்படும் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: