சென்னை தீவுத்திடல் அருகே குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூவம் ஆற்றில் இறங்கி மக்கள் போராட்டம்

* அதிகாரிகளுடன் வாக்குவாதம்

* பெரும்பாக்கத்திற்கு செல்ல மறுப்பு

சென்னை: கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரம் வசிப்பவர்களை அகற்றி, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்ம் நடந்தது. சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரத்தில் வசிப்பவர்களை அகற்றிவிட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, மாநகராட்சி 59வது வார்டில் சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்கள் தங்களை பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், காந்தி நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் அல்லது கேசவ பிள்ளை பூங்கா, ராம்தாஸ் நகர் போன்ற இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், வாரிய தலைவர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று குடிசைகள் அகற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், நேற்று சத்திய வாணிமுத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதி குடிசைகளை அகற்ற காவல்துறையினரோடு அதிகாரிகள் வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடிசைகளை அகற்றாமல் தடுத்து நிறுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தொடர்ந்து, மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பா.ரஞ்சித் எதிர்ப்பு: சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த அவர் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஆளும்கட்சியினர் சென்னையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மட்டும் தான் சரியாக செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்பகுதியில் இருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இடம் தர வேண்டும்’ என்றார்.

Related Stories: