நவம்பர் மாதம் மட்டும் 454 ஆலைகள் மீது நடவடிக்கை 1,154 சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல்’

* 541 பிர்காக்களில் நிலத்தடி நீர் எடுக்க தடை

* 396 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

சென்னை:தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வணிக நோக்கங்களுக்காக தண்ணீர் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த மார்ச் மாதம் வரை அனுமதி இல்லாமல் செயல்பட்ட 700 குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கிடையே பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் உற்பத்தி ஆலைகள் நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்பேரில், பாதுகாப்பு மற்றும் பாதி அபாயகரமான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி கேட்டு 690 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இதில், 486 விண்ணப்பங்களுக்கு நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகளவில் நிலத்தடி நீர் சுரண்டப்பட்டபகுதி, அபாயகரமான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதிக்க கேட்டு வந்த 396 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், தொடர்ந்து, சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவது தொடர்பாக நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்று இல்லாமல் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். அதன்பேரில், கடந்த மாதம் வரை சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுத்து வரும் 454 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆபத்தான நிலத்தடி நீர்

தமிழகத்தில் 1,166 பிர்காக்களில் 462 பிர்காக்களில் நிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்பட்ட பகுதியாகவும், 79 பிர்காக்கள் அபாயகரமான பகுதியாகவும், 163 பிர்காக்கள் பாதி அபாயகரமான பகுதியாகவும், 427 பகுதி பாதுகாப்பானதாகவும், 34 பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புதன்மையாக மாறி இருக்கிறது.

Related Stories: