தேஜஸ் ரயிலில் சென்னைக்கு வந்த மனிதனின் இடது கால்: பதப்படுத்தி திண்டுக்கல்லுக்கு பார்சலில் சென்றது; போலீசார் நடவடிக்கை

சென்னை: திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த தேஜஸ் ரயிலின் சக்கரத்தில் மனிதனின் இடது கால் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் இருந்து கடந்த 6ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு எழும்பூருக்கு தேஜஸ் ரயில் இயக்கப்பட்டது. ரயில் கொடைரோடு, திருச்சி ரயில் நிலையங்களை கடந்து 6ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர், பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பணிமனையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பணிமனை ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது ரயில் இன்ஜின் மற்றும் சக்கரத்துக்கு இடையில் மனிதனின் கால் சிக்கிஇருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த எழும்பூர் ரயில்வே போலீசார் மனிதனின் ஒரு கால் மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ரயில் வரும் வழியில் உள்ள அனைத்து ரயில்வே காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு விசாரித்து வந்தனர். விசாரணையில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு அருகே வடமதுரைக்கும், அயலூருக்கும் இடையில் தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாகவும், 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேடியும் அவருடைய இடது கால் காணவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில், இறந்த நபரின் இடது கால், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுகல்லில் இருந்து சுமார் 480 கி.மீ தூரத்திற்கு சக்கரத்தில் சிக்கிய படியே எழும்பூர் ரயில்நிலையம் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். இதையடுத்து எழும்பூர் ரயில்வே போலீசார் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்த இடது காலை பாதுகாப்பான முறையில் நேற்று முன்தினம் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சல் பெட்டியில் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: