கலையரசன் விசாரணை ஆணையம் முன்பு பல்கலை பதிவாளர் ஆவணங்களுடன் ஆஜர்

சென்னை: அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் முன்பு பதிவாளர் நேரில் ஆஜராகி ஆவணங்களை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்ப மீது ரூ.280 கோடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், தமிழக அரசு தாமாக முன் வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை கமிட்டியிடம் ஒப்படைக்க கோரி விசாரணைக்குழு கேட்டும் ஒப்படைக்காததால் பதிவாளர் கருணா மூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் கலையரசன் கமிட்டி அமைந்துள்ள சென்னை பசுமை வழி சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் அண்ணா பல்கலை கழக பதிவாளர் கருணா மூர்த்தி உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிபதி கேட்ட ஆவணங்களை வழங்கினார். அவருடன் பல்கலை கழக அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணா மூர்த்தியை தொடர்ந்து, மேலும் சிலரையும் விசாரணைக்காக அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: