விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பந்த் முக்கிய நகரங்களில் கடையடைப்பு: மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் நேற்று பந்த் நடந்தது. முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நேற்று பந்த் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற எம்எல்ஏக்கள், கட்சி முன்னணியினர், விவசாயிகள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். டெல்டா மாவட்டங்களில் நேற்று முழு அளவில் பந்த் நடந்தது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் 70 சதவீத கடைகளும், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முழு அளவிலும் கடைகளை அடைத்து வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். டெல்டாவில் மட்டும் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டன.

கோவை: கோவை மாவட்டத்தில் மளிகை கடைகள், ஜவுளி கடைகள், நகை கடைகள், உள்பட 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஈரோடு தினசரி காய்கனி மார்க்கெட், பெருந்துறை தினசரி மார்க்கெட் உள்ளிட்ட தினசரி மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன. திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடைகள், மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டன. மாநகர பகுதிகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. திருப்பூரில் லாரிகள் கூட்ஷெட்டில் நிறுத்தப்பட்டன. திருப்பூரில் இருந்து பின்னலாடைகள், பல்லடத்தில் இருந்து கறிக்கோழிகள், காடா துணிகள், கொப்பரை உள்ளிட்டவை வெளி பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடலில் இறங்கி போராட்டம்:  ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் சார்பில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். சங்க நிர்வாகி ராயப்பன் தலைமையில் மீனவர்கள் கருப்புக்கொடியுடன் கலந்துகொண்டனர். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். புதுவை: புதுவையில் அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு சென்றன. சரக்கு லாரிகள் மட்டுமின்றி ஆட்டோ, டெம்போக்களும் ஓடவில்லை. தனியார் வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. மருந்து கடைகள், சிறிய தேநீர் கடைகள் மட்டும் திறந்திருந்தன. தியேட்டர்களில் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில தனியார் பஸ்கள் இயங்கவில்லை. எனினும் போக்குவரத்து வழக்கம் போல இருந்தது. வேலூர்: வேலூர் மாவட்டத்தில் குறைந்த அளவிலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகளும், பஸ்களும் வழக்கம்போல இயங்கியது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் ஜின்னா ரோடு, நகைக்கடை பஜார், பெரிய கடைத்தெரு, கோட்டை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 840 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல், பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல செயல்பட்டன. மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜல்லிக்கட்டு காளைகளுடன் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி நேரு சிலை அருகே மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்தும் சென்று வாகனத்தில் ஏற்றி சென்றனர். சேலம்: சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலின் போது போலீசாரிடம் நடந்த வாக்குவாதமும், தள்ளுமுள்ளுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. 535பேர் கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்தும் கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தது. கார்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. 30 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் நிகழவில்லை. கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.

Related Stories: