புயல் சேதங்களை பார்வையிட முதல்வர் எடப்பாடி இன்று கடலூர், சிதம்பரம் பயணம்: நாகப்பட்டினம், திருவாரூர் நாளை செல்கிறார்

சென்னை: தமிழகத்தை கடந்த 30ம் தேதி முதல் புரெவி’ புயல் தாக்க தொடங்கியது. இந்த புயல் காரணமாக பெரிய அளவில் சூறாவளி காற்று இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஒரு வாரம் பெய்த கனமழை காரணமாக கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  நெல், வாழை, பப்பாளி உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.  இந்த மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை திரும்ப பல நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார். அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் முதல்வர் கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளில் புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார். மேலும் நிவாரண முகாம்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மழை நீரை விரைவில் வெளியேற்றுவது மற்றும் மழை நீர் வெளியே செல்ல நிரந்தர மாற்று வழி குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி, இன்று இரவு கார் மூலம் நாகப்பட்டினம் சென்று தங்குகிறார். நாளை (9ம் தேதி) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை, நன்னிலம் பகுதியில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிடுகிறார்.  அந்த மாவட்டங்களிலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர், நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 3 மாவட்டங்களில் புயல் சேதங்களை பார்வையிட்டு விட்டு முதல்வர் எடப்பாடி நாளை இரவு சென்னை திரும்புகிறார்.

Related Stories: