தொடரும் மழையால் வெள்ள நீர் வடியாமல் குட்டி தீவுகளாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள்: மாடிகளில் தஞ்சம் அடைந்த மக்கள் கடும் அவதி

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக பெய்த மழையை தொடர்ந்து இன்று அதிகாலையும் மழை தொடர்ந்ததால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடியாமல் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் மாடிகளில் மக்கள் தஞ்சம் அடைந்து கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.‘புரெவி’ புயல் காரணமாக கடந்த 2ம்தேதி இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகள் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

  குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் அரசு அமைத்துள்ள முகாம்களுக்கு சென்று விட்டனர். சென்னை புறநகர் பகுதிகளில் அபார்ட்மென்ட்களில் சொந்த வீடு வாங்கியவர்களின் நிலையோ பரிதாபம் தான். பார்க்கிங் ஏரியா முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கி கிடப்பதால், மாடிகளில் வசித்து வருபவர்கள் நீச்சல் தெரிந்தால் மட்டுமே வர முடியும். வேலைகளுக்கும் செல்ல முடியாமல் பலர் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.  தனி வீடு கட்டியவர்கள் நிலையோ அதை விட பரிதாபம். மழைநீரில் மிதந்து வரும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளால் அச்சமடைந்துள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கிடைக்காததால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் மழை குறைந்த நிலையில், மழைநீர் வடியத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது மழை தொடர்வதால் மழைநீர் தேங்குவது குறையவில்லை. குறிப்பாக இன்று அதிகாலை தாம்பரம், போரூர், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் மீண்டும் தண்ணீர் ஓடத் தொடங்கியது. இதனால் மக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில்  வில்லிவாக்கம் பாபா நகர், தி.நகர் அபிபுல்லா சாலை, பெரியார் நகர் ஜெகநாதன் தெரு, கம்பர் நகர், அசோக் அவென்யூ, மணலி வீனஸ்நகர், பால சுப்பிரமணியம்நகர், கொளத்தூர் பூம்புகார் நகர் ஆகிய இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.

வில்லிவாக்கம் பாபா நகரில் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு ஒரு அடி முதல் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோன்று, வேளச்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, வில்லிவாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் அப்பகுதிகளில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால், ஒரு குட்டி தீவு போல காட்சியளிக்கிறது. மழைநீர் வடியாமல் வெள்ளம் போல தேங்கி கிடக்கும் நிலையில், அவற்றை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதே நிலை இன்னும் தொடர்ந்தால் தேங்கிய நீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே உடனடியாக தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: