குடியிருப்பில் பல மாதங்களாக குடிநீரின்றி தவிப்பு; குடிசை மாற்றுவாரிய அலுவலகம் முற்றுகை

வேலூர்: குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் பல மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லாமல் தவிப்புக்குள்ளான மக்கள், குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே முத்துமண்டபம் பகுதியில், சலவை தொழிலாளர்கள் மற்றும் குடிசைவாழ்  மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில், 225 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. மேலும் தண்ணீர் வசதிக்காக குடியிருப்பு பகுதியில் மின்மோட்டார் இணைப்புடன், 5 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்வெல்கள் மூலம் அங்குள்ள மக்கள் குடிநீர் மட்டுமின்றி அத்தியாவசிய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இதற்காக மாதந்தோறும் 225 குடும்பங்களும் தலா ₹250 வீதம் மின்கட்டணமாக செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்தை மொத்தமாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வசூலித்து கட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த பல மாதங்களாக தண்ணீரின்றி இங்குள்ள குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த மக்கள் நேற்று காலை திடீரென காட்பாடி கோபாலபுரத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கொரோனா காலத்திலும் நாங்கள் தொடர்ந்து மாதந்தோறும் மின்கட்டணத்துக்காக பணம் செலுத்தி வந்தோம். ஆனால் மின்கட்டணம் செலுத்தாததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறுகின்றனர். எங்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் சப்ளையும் இல்லை. மாநகராட்சி தரப்பில் கேட்டால் எங்களுக்கு இக்குடியிருப்பை முறைப்படி மாநகராட்சி வசம் ஒப்படைக்கவில்லை என்கின்றனர். குடிசை மாற்று வாரியம் எங்கள் பகுதியில் ஒரு அமைப்பை உருவாக்கி அவர்கள் மூலம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அல்லது மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள், முற்றுகையில் ஈடுபட்டவர்களை அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ‘விரைவில் மாநகராட்சியிடம் பேசி, குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். மின்கட்டணம் செலுத்துவதற்கு காலஅவகாசம் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டு உடனடியாக மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குடியிருப்போர் சங்கம் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றனர். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: