புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏர் கலப்பையில் தூக்கிலிடுவது போல் விவசாயிகள் நூதன போராட்டம்: பட்டுக்கோட்டையில் பரபரப்பு

பட்டுக்கோட்டை:புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் கொட்டும் மழையில் முகத்தை மூடிக்கொண்டு, ஏர்கலப்பையில் தூக்கிலிடுவதுபோல் சித்தரித்து நூதன போராட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், தலைமை தபால் நிலையம் அருகே நேற்று இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து நூதனப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் கழுத்தை நெரித்து படுகொலை செய்வதற்கு சமம். இதனை வலியுறுத்தும் விதமாக ஏர்கலப்பையின் முகத்தடியில் மாடுகளை பூட்டும் இடத்தில்  இளைஞர்கள் 2 பேர் தலையோடு முகத்தையும் சேர்த்து பச்சை துண்டால் கட்டிக் கொண்டு தன்னைத்தானே தூக்கிலிடுவதுபோல் நின்று மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: