சென்னை புறநகர் பகுதியில் நீடிக்கும் அவலம் 10 ஆண்டுகளாக முடங்கிய பாதாள சாக்கடை திட்டம்: தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

* சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு பாதாள சாக்கடை  அமைக்க திட்டமிடப்பட்டது.

* சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் 160.97 கோடியில் தாம்பரத்தில் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.

* 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடிக்கப்படாத இந்த பணிகளுக்காக இதுவரை 150 கோடி செலவு  செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையின் புறநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம்  முழுமையாக நிறைவேற்றப்படாத காரணத்தால் பொதுமக்களுக்கு மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சென்னையில் மொத்தம் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகரின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையுடன் இணைந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் புறநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் பரவுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி வரை ஊராட்சியாகவும், அதேபோல், ராஜிவ் காந்தி சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகள் ஊராட்சியாகவும் இருந்தன. பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் வீடுகளில் கழிவுநீர் தொட்டி அமைத்து 750 முதல் ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்றி வருகின்றனர். மேலும் சிலர் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் விடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சிலர், ஆளுங்கட்சியினர் உதவியோடு மழைநீர் கால்வாயில் குழாய் அமைத்து கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.

இதுபோன்று, புழல் கண்ணப்ப சாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், சக்திவேல் நகர், திருமலை நகர், புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர் கடைவீதி, பாலாஜி, 25வது வார்டு எம்ஜிஆர் நகர், அறிஞர் அண்ணா நகர், மதுரா மேட்டுப்பாளையம், லிங்கம் தெரு, ரெட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த பகுதிகளிலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் தேங்குகிறது. குறிப்பாக, ரெட்டேரி, லட்சுமிபுரம், டீச்சர்ஸ் காலனி, செகரட்டரி காலனி, கல்பாளையம், புத்தகரம், சூரப்பட்டு, சாரதி நகர், ராமன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிக்கப்படாமல் அரைகுறையாக போடப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சியில் கடந்த 2008ம் ஆண்டு பாதாள சாக்கடை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் ரூ.160.97 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பாதாள சாக்கடை பணிகள் திட்டம், 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது. ஆனால், இந்த பணிகளுக்காக இதுவரை ரூபாய் 150 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணிகளுக்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டதால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. ஒவ்வொரு முறையும் சேதமான சாலைகள் மேல் மீண்டும், மீண்டும் சாலை அமைத்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் அதிகாரிகளால் பொதுமக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணம்தான் வீணாகிறது. சில மாதத்திற்கு முன்னர் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன் மீது களிமண்களை போட்டு மூடி வைத்திருந்ததால் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் நோக்கி வந்த இரண்டு பெண்கள் சறுக்கி விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தனர்.

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதற்காக முதற்கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்க இருந்த நிலையில் பூந்தமல்லி, திருவேற்காடு, நகராட்சிகள், மாங்காடு பேரூராட்சி, மற்றும் 23 ஊராட்சிகளை இணைத்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனைத்துவிதமான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் பல்வேறு அரசு துறைகளுக்குள்ளே ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. பாதாள சாக்கடை இல்லாததால் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதோடு மட்டுமன்றி பல இடங்களிலும் தேங்குகிறது. மேலும் இதனால் நிலத்தடி நீர் மாசடைகிறது. மழைக்காலங்களில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, சென்னை புறநகர் பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Related Stories: