நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரி மாவட்டம் முழுவதும் 1200 போலீஸ் பாதுகாப்பு: ரயில்களில் தீவிர சோதனை

நாகர்கோவில்: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள லாட்ஜூகளிலும் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே புரெவி புயல் காரணமாக கடலோர பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் இருந்தனர். இந்த கண்காணிப்பு பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ரயில்களிலும், தண்டவாளங்களிலும் போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் வந்து சேரும் அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனர். ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கண்காணித்து வருகிறார்கள். ரயில் பயணிகள் மட்டுமின்றி, அவர்கள் கொண்டு வரும் உடமைகளும், பார்சல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ரயில்வே பாலங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சந்தேகத்துக்குரிய அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. கடலோர சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நாளை (6ம்தேதி) போராட்டங்களும் நடைபெறும் என்பதால், காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories: