திரிணாமுல் காங். தலைவர்களில் எதிர்கட்சியுடன் தொடர்பில் உள்ளோர் வெளியேறலாம்: மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் எதிர்கட்சியுடன் தொடர்பில் உள்ளோர் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, காளிகாட்டில் உள்ள அவரது இல்லத்தில் மூன்று மணி நேரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அதே நேரம், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ‘எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம். ஒரு தலைவர் கட்சியை விட்டு வெளியேறினால் (கடந்த சில தினங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுபேந்து உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகினர்), கட்சியில் இன்னும் பல லட்சம் தலைவர்களை உருவாக்க முடியும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.

டிச. 8 முதல் மத்திய கொல்கத்தாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால், மத்திய அரசுக்கு எதிராக மூன்று நாள் தர்ணா போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: