நிவர் புயலால் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் முறிந்தன ஜவ்வாதுமலையில் 70 கிராமங்களில் ஒரு வாரமாக மின்சாரம் இல்லை: குடிநீர் சப்ளை இன்றி கடும் அவதி தொடர்ந்து இருளில் தவிக்கும் மக்கள்

போளூர்: நிவர் புயலால் மரங்கள் விழுந்ததில் மின்கம்பங்கள் முறிந்தன. இதனால் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் 70 கிராமங்களில் ஒரு வாரமாக மின்சாரமின்றி மலைகிராம மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். திருவண்ணாமலை  மாவட்டம் போளூர் அருகே ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் 70க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கடந்த 25, 26ம் தேதிகளில் ஏற்பட்ட நிவர் புயல் தாக்கத்தால் ஜவ்வாதுமலையில் சூறாவளி காற்று வீசியது. இதில் நூற்றுக்கணக்கான  மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் ஏற்பட்ட மின்கம்ப சேதங்களை வேகமாக சீரமைத்துவரும் மின்வாரிய  அதிகாரிகள், மலைப்பகுதியில் ஆமை வேகத்தில் பணி செய்து அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.  

பல கிராமங்களில் இன்னும் சீரமைப்பு பணிகள் நடைபெறவே இல்லை என்று கூறப்படுகிறது. இப்பகுதிகளுக்கு கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுகாநல்லூர் துணை மின்நிலையத்திலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பு  வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜவ்வாதுமலை மின் பாதைகளை சீரமைக்காமல் அலட்சியம் காட்டியதால் தற்போது புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மின்சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால் ஜவ்வாதுமலை  ஒன்றியத்துக்குட்பட்ட 70 மலை கிராமங்களும் கடந்த ஒரு வாரமாக இருளில் மூழ்கி கிடக்கிறது. மேலும் செல்போன் டவர்கள் செயல்படாததால் தொலைதொடர்பு சேவையும் முற்றிலும் செயல் இழந்துள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு  குடிநீர் சப்ளை செய்யப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தகவல் தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவசர காலத்திற்கு 108  ஆம்புலன்சை அழைக்கக்கூட முடியாத நிலை உள்ளதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில்  மின்கம்பங்களை சீரமைத்து மின் இணைப்பு வழங்கவும்  ஜவ்வாதுமலை நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கவும் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: