கன்னடம் படித்ததால் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்ய சசிகலா மனு: கர்நாடக சிறைத்துறை சட்ட ஆலோசனை

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா கன்னடம் படித்தது உள்பட பல காரணங்களை காட்டி நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யகோரி சிறை நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனு மீது அதிகாரிகள் சட்ட  நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு  விதிக்கப்பட்ட அபராத தொகையான 10 கோடியே 10 ஆயிரத்தை சசிகலா மற்றும் இளவரசி நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளனர்.  இளவரசி அபராத தொகை செலுத்தியதற்கான அதிகாரபூர்வ தகவல் தனி நீதிமன்றத்தில் இருந்து பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு நேற்று முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.  

மேலும் மற்றொரு குற்றவாளியான சுதாகரனை விடுதலை செய்வதுடன் அவர் செலுத்த வேண்டிய அபராத தொகை செலுத்த அனுமதிகோரி தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.   இந்நிலையில், இதே வழக்கில் சசிகலா ஏற்கனவே 48 நாட்கள் சிறையில் இருந்ததை கழிக்க வேண்டும், அவர் சிறையில் இருந்தபோது கன்னட மொழி கற்று கொண்டுள்ளார். இதை நன்னடத்தையாக கருதி அவரை  தண்டனை காலம் முடிவதற்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில சிறை துறை டிஜிபி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த வாரம் வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர்  மனு கொடுத்தனர்.

அந்த மனுவை பரிசீலனை செய்துள்ள சிறை நிர்வாகம், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி  வருவதாக தெரிகிறது. இதற்கு முன் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கான முன்னுதாரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் சிறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரியவருகிறது.

சட்ட நிபுணர்கள் சாதகமான பதில் கொடுத்தால், விடுதலை செய்யும் வாய்ப்புள்ளதாக சிறை வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

Related Stories: