கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்ததை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை:  மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்து, அதை கடந்த செப்டம்பர் 4ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதில் ‘‘தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் மாஸ்க் அணியாதது, தனி மனித இடைவெளியை பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான விதிகளை பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 77 வயதான ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்று வந்தது.

தமிழக அரசு தரப்பில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து ஏற்கனவே பல அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றிற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: