பழைய ஊதிய விகிதத்தில் சம்பளம் போட மறுப்பு; தமிழகம் முழுவதும் உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் இல்லை: 3 மாதம் கால அவகாசம் இருந்தும் தர மறுத்ததால் அதிர்ச்சி

சென்னை: மூன்று மாத கால அவகாசம் இருந்தும் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்க மறுத்து சம்பள கணக்கு அலுவலகம் பட்டியலை திருப்பி அனுப்பிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நேற்று  உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம், வேளாண்துறை, மீன்வளம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில் 7வது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் கடந்த 2013 அரசாணையின் போது அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் தற்போது நிர்ணயம் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதாவது உதவி பொறியாளர்களுக்கு 9300-34800+5100ம், உதவி செயற்பொறியாளர்களுக்கு 15,600-39100+5400, செயற்பொறியாளர்களுக்கு 15600-39100+6600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி பொறியாளர்களுக்கு மட்டும் ஊதிய விகிதம் பல மடங்கு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு உதவி பொறியாளர்களும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் புதிய ஊதியத்தில் அவர்களுக்கு சம்பளம் போடுவதற்கு 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பழைய ஊதியத்தில் ஊதியம் வழங்க கோரி சம்பள கணக்கு அலுவலகத்திற்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சம்பள கணக்கு அலுவலகம் அந்த பட்டியலை திருப்பி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக தற்போது நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதிய விகிதத்தில் உள்ள படி அனுப்பிவைக்குமாறு சம்பள கணக்கு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று மாநிலம் முழுவதும் உள்ள 15 ஆயிரம் பொறியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சம்பள கணக்கு அலுவலகம் மூலம் மீண்டும் பட்டியலை அனுப்பி அதன் பிறகு ஊதியம் பெற மேலும் நாட்களாகும் என்று கூறப்படுகிறது. இது பொறியாளயர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>