நீதிபதிகளை மோசமாக விமர்சனம் செய்த விவகாரம் கர்ணனை இதுவரை ஏன் கைது செய்யவில்லை? டிஜிபி, போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிபதிகளை மோசமாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இருவரும் டிசம்பர் 7ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும், நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார் என்று கூறப்பட்டது. போலீசின் இந்த விளக்கத்தை ஏற்காத நீதிபதிகள், போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், கர்ணனை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் டிசம்பர் 7 ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Stories: