ரெட் அலர்ட், கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள், கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: ரெட் அலர்ட், கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு டிசம்பர் இறுதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் ரெட் அலர்ட் அறிவிப்பால் மீண்டும் தமிழகத்தில் மழையோ, கன மழையோ பெய்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் வானிலை பற்றிய தனியார் ஆய்வு மைய கண்காணிப்பாளர்கள், டிசம்பர் மாதத்திலே மீண்டும் 2 முறை காற்றழுத்த தாழ்வின் காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொத்தத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை இருக்கும். தமிழக அரசு, கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மேற்கோண்டு வரும் நடவடிக்கைகள் நல்ல பயன் தருகிறது.

இந்த வேளையில் டிசம்பர் மாதத்தில் மழைக்கும் வாய்ப்பிருப்பதால் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாத இறுதி வரை திறக்கப்படாமல் இருப்பது சிறந்தது. இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். தமிழகம் வரும் மத்திய குழு, நிவர் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தேவையான நிவாரணத்தை வழங்க, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முறையாக முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும். மத்திய அரசும், நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசு கேட்கும் நிதியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: