ரயில் பெட்டிகளை போல வகுப்பறை சுவரை வர்ணம் தீட்டிய ஆசிரியர்கள்: அரசு பள்ளியில் அசத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ரயிலை பார்த்திராத தமது பள்ளிக் குழந்தைகளுக்காக, வகுப்பறைச் சுவரை ரயில் பெட்டியை போல வண்ணம் தீட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அசத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், லெக்கணாம்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 236 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் ஆசிரியர்கள், ஏற்கெனவே பள்ளி வளாகத்தை மாதிரி பள்ளியைப் போல வடிவமைத்துள்ளார்.

 அதாவது, மாணவர்களின் அறிவியல் திறனையும், பொதுஅறிவுத் திறனையும் வளர்க்க தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையிலான தேர்வு வளாகம் முழுவதும் பயன்தரும் மரங்களை அவற்றின் பெயரைக் குறிப்பிட்டு நட்டு வளர்த்தல், தரமான ஆய்வுக் கூடம், வகுப்பறை தோறும் நூலகம் என பல முன்மாதிரி முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா பொது முடக்க காலத்தில் புதிய நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது, சுமார் 80 அடி நீளத்துக்கு, 3 வகுப்பறைகளின் சுவர்களை ரயில் பெட்டிகளை போல வண்ணம் தீட்டியுள்ளனர்.

புதுமாதிரியான இந்த செயல் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

எங்கள் மாணவர்கள் முற்றிலும் கிராமத்து, ஏழை மாணவர்கள். ரயிலை பார்த்ததில்லை. இதற்காகவே கொரோனாவுக்கு முன் மாணவர்களை ராமேஸ்வரத்துக்கு ரயிலில் அழைத்து சென்று திரும்ப திட்டமிட்டிருந்தோம். கொரோனா பொது முடக்கத்தால் இந்த சுற்றுலா திட்டம் தடைபட்டது. இதனால் மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது ரூ.15 ஆயிரம் செலவு செய்து வகுப்பறை சுவரை ரயிலைப் போல வர்ணம் தீட்டியிருக்கிறோம்.

பள்ளியின் ஓவிய ஆசிரியர் ராஜேந்திரன், எழுத்தர் ராஜ்குமார் ஆகியோர் இப்பணியை செய்து முடித்தனர். பள்ளி திறந்ததும் மாணவர்கள் உற்சாகமாக வருவார்கள். அவர்களுக்கு ரயிலை பற்றியும், ரயில் பயணம் பற்றியும் விளக்குவோம் என ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: