சிவகங்கை திருமலையில் பாரம்பரிய சின்னங்கள் அறிதல் நிகழ்ச்சி

சிவகங்கை:  சிவகங்கை அருகே திருமலையில் ராமநாதபுரம் அரசு தொல்லியல் துறை, சிவகங்கை தொல் நடைக்குழு சார்பில் தொன்மை போற்றுதும் பாரம்பரிய சின்னங்கள் அறிதல் நிகழ்வு நடந்தது. மதுரை தொல்லியல் அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். ராமநாதபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் ஆசைத்தம்பி வரவேற்றார். திருமலை எப்படி பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது, குடைவரை கோயில் கட்டுமான வரலாறு, கோயிலில் இடம்பெற்றுள்ள 32 கல்வெட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் வணிகர்கள் கூடி பொருளுக்கு விலை வைத்த செய்தியை சொல்லும் கல்வெட்டு, சமணப்படுக்கை அமைப்பு முறை மற்றும் தமிழி எழுத்து கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் அது வரையப்பட்ட காலம் 4 ஆயிரம் ஆண்டு பழமையான அதன் அமைப்பு முறை அதில் வெளிப்படும் செய்திகள் குறித்து விளக்கப்பட்டது.

தொடர்ந்து திருமலையின் தொல்லியல் சின்னங்கள் என்னும் கையேடு வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன  தலைவர் ராஜகுரு, மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிவகங்கை தொல் நடைக்குழுவை சேர்ந்த தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன் வாழ்த்துரை வழங்கினர். திருமலையை தொல்லியல் பாதுகாக்கப்பட்ட  சின்னமாக அறிவிக்க பாடுபட்ட வரலாற்று ஆர்வலர் திருமலை அய்யனார் பாராட்டப்பட்டார். இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடை குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் நரசிம்மன், பிரபாகர் மற்றும் சிவகங்கை தமிழ் சங்க அமைப்பினர், ஆசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா செய்திருந்தார்.

Related Stories: