பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி கடத்தல் சிலை பறிமுதல்: இருவர் கைது

சென்னை: பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்த ஒன்றரை அடி உயர சாமி சிலையை போலீசார் பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். இசிஆர் வழியாக சிலை ஒன்று கடத்தப்படுவதாக சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாமல்லபுரம் இசிஆர் சாலை பக்கிங்காம் பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கையில் பெரிய பை ஒன்றை வைத்துக் கொண்டு இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். அதனால் அவர்கள் கொண்டு வந்த பையை பிரித்து சோதனையிட்டனர்.

அதில் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட பூதேவி உலோக சாமி சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையின் தலை பகுதியில் சிரசு சக்கரம், தங்கம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக அறுக்கப்பட்டிருந்தது.

அவர்களிடம் சிலைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செங்கல்பட்டு மாவட்டம் இந்திரா நகர் 2வது தெருவை சேர்ந்த வேல்குமார்(33), செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்வம் என்பதும் தெரியவந்தது. இருவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த சிலை கோயிலில் இருந்து திருடப்பட்டு, பின்பு பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்தது வந்தது தெரியவந்தது. திருடப்பட்ட இந்த சிலை எந்த கோயிலில் இருந்து திருடியது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: