தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது: 1ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும்; கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் வருகிற 1ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ‘நிவர்’ புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25ம் தேதி நள்ளிரவில் கரையை கடந்தது.

இந்த புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்பு கடுமையாக இருந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் இன்னும் மழைநீர் வடியாத நிலை இருந்து வருகிறது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இதனால் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் தென்தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது தற்போது மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. டிசம்பர் 2ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென் தமிழகத்தை நோக்கி வரக்கூடும். இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30ம் தேதி(நாளை) தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 1ம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மேட்டுப்பட்டியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. அவிநாசி, வாடிப்பட்டி, சோழவந்தானில் தலா 7 செ.மீ, ஆண்டிப்பட்டி, வத்திராயிருப்பு, திருப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், உசிலம்பட்டியில் தலா 6 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியிலும், 30ம் தேதி(நாளை) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், 1ம் தேதி தென்மேற்ஙகு வங்கக்கடல், ஆந்திர பகுதிகள், குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் ஆழ்க்கடல் பகுதிக்கு வருகிற 2ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: