40 ஆயிரம் கோயில்களின் நிர்வாக பணிகளை கவனிப்பதில் சிக்கல் 9 இணை ஆணையர் பணியிடம் உருவாக்கம்: சென்னை மண்டலம் இரண்டாக பிரிப்பு; அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: 40 ஆயிரம் கோயில்களின் நிர்வாக பணிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், 9 இணை ஆணையர் பணியிடங்கள் உருவாக்கம் செய்து அறநிலையத்துறை செயலாளர் விக்ரம்கபூர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் 11 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இணை ஆணையரும் நியமிக்கப்பட்டு நிர்வாகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் பல்வேறு வகையில் விரிவடைந்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு அடிப்படை கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதனால், கோயில்களின் வளர்ச்சி, பக்தர்கள் வசதிக்காக பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படுகிறது.

இதை தொடர்ந்து சென்னையில் கூடுதலாக ஒரு இணை ஆணையர் அலுவலகம் மற்றும் புதிதாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகை, திண்டுக்கல், கடலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு 8 இணை ஆணையர் அலுவலகங்களாக மொத்தம் 9 இணை ஆணையர் அலுவலகங்களில் 171 பணியிடங்களுடன் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, ரூ.9 கோடி செலவில் 9 இணை ஆணையர் அலுவலகங்கள் புதிதாக உருவாக்கம் செய்தும், 171 பணியிடங்கள் தோற்றுவித்தும், சென்னை மண்டலத்தை இரண்டாக பிரித்தும் அறநிலையத்துறை செயலாளர் விக்ரம்கபூர் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த புதிய அலுவலகங்களுக்கு மண்டல இணை ஆணையர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்டல இணை ஆணையர் புதிய அலுவலகங்கள் தொடங்குவது தொடர்பாக கட்டிடங்கள் தேர்வு செய்தல் மற்றும் தயார் நிலைப்படுத்துதல் உள்ளிட்ட அனை்து முதற்கட்ட நடவடிக்கைளை பொறுப்பு அலுவலரும், ஒருங்கிணைப்பு அலுவலரும் மேற்கொண்டு நடவடிக்கை விவரத்தினை அறிக்கையாக அளிக்க கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

* சென்னை மண்டலங்களில் இடம் பெறும் பகுதிகள்

சென்னை மண்டலம் 2 ஆக  பிரிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம்:

சென்னை மண்டல இணை ஆணையர் -1

திருவொற்றியூர், தண்டையார் பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அம்பத்தூர், அயனாவரம்.

சென்னை மண்டல இணை ஆணையர்- 2

மயிலாப்பூர், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர்.

Related Stories: