முதல்வர் எடப்பாடி அறிவிப்பு நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் நிவர் புயல் ஏற்பட்டபோது, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தினால்தான் மக்களை பாதுகாக்க முடிந்தது. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 24 மணி நேரமும் சென்னை, எழிலகத்தில் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி அவ்வப்போது ஏற்படும் நிலவரத்தை மக்களுக்கு எடுத்து சொல்லியதால் இன்றைக்கு தமிழகத்திலே அதிக அளவு உயிர்சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் புயல் தாக்கியதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பிரதமர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்ற அறிவிப்பையும் நல்ல செய்தியாக வழங்கினார். மத்திய அரசும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புயல் தற்போது ஆந்திர நோக்கி சென்றாலும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமான மழை பொழிவை தந்துள்ளது. ஆந்திராவில் கனமழை பெய்ததால் அங்கிருந்து தண்ணீர் பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது.

அதையும் மாவட்ட கலெக்டர்கள் சரியாக கையாண்டு வருகின்றனர். நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கீடு செய்து பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பெற்றுத்தரவும் உத்தரவிட்டுள்ளேன். புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: