மாற்றுத்திறன் வீராங்கனைகளுக்கு நிரந்தரப்பணி வழங்கி அங்கீகரிக்க வேண்டும்: ஆணையத்திற்கு உத்தரவு

மதுரை: மதுரை சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜகுமாரி ஜீவகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனைகளான தீபா, சங்கீதா ஆகியோர் சர்வதேச போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 84 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இவர்களைப் போல பல மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல சாதனைகள் படைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்குரிய நிரந்தர வேலைவாய்ப்ைப அரசுகள் வழங்கவில்லை. இருவரையும் அங்கீகரிக்கும் வகையில் நிரந்தர அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்து, ‘‘இருவரும் சர்வதேச அளவில் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஒருவர் உயரிய விருதான கல்பனா சாவ்லா விருதும் பெற்றுள்ளார். இவர்களுக்கு நிரந்தர அரசுப் பணி வழங்குவதன் மூலமே அவர்களது சாதனையை அங்கீகரிக்க முடியும். இவர்கள் இருவருக்கும் உரிய அரசு பணி வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 17க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: