சென்னை மயிலாப்பூர், தி.நகரில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

சென்னை, :  தொடர்ந்து 3வது நாளாக சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர், தி.நகரில் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்.‘நிவர்’ புயல் தாக்கத்தால் பெய்த மழையால் சென்னையில் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீரால் பல பகுதிகள் சூழப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ”நிவர்” புயல் மழையால் பாதிப்பிற்கு உள்ளான கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளை நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினார்.

2வது நாளாக நேற்று ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.இந்த நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்று காலை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது பாதிப்புக்குள்ளான மீனவ மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து மயிலாப்பூர் டுமீல் குப்பம் மீனவ மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் மயிலாப்பூர் ராஜீவ்காந்தி நகர் மீனவ மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். தொடர்ந்து தி.நகரில் பகுதிகளில் நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆய்வின் போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை தென் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மயிலை த.வேலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>