இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீசாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் போலீசார் 4 பேரின் ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கு குறித்து சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்குகளில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்களில் ஏட்டு முருகன், காவலர்கள் வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், ‘சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இல்லை. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்ஐ ரகுகணேஷ் ஆகியோர் தான் தாக்கியுள்ளனர்’ என கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘விசாரணைக்காக அழைத்து வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து தாக்கும்போது மனுதாரர்கள் ஏன் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை?’ என்றார். சிபிஐ தரப்பில், ‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கும்’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: