ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஊன்றுகோல்கள் உதவியுடன் ஐயப்ப பக்தர் பாதயாத்திரை

சின்னாளபட்டி: விபத்தில் காலை இழந்த போதும் ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஊன்றுகோல்கள் உதவியுடன் ஐயப்ப பக்தர் பாதயாத்திரையாக செல்வது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (45). தங்க நகை செய்யும் வேலை செய்து வருகிறார். ஐயப்ப பக்தரான இவர் 21 ஆண்டுகளாக நண்பர்களுடன் சபரிமலைக்கு பாதயாத்திரை சென்று வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் வலது காலை இழந்த போதும் சுரேஷ் சபரிமலைக்கு பாதயாத்திரை செல்வதை நிறுத்தவில்லை.

கொரோனா பிரச்னை உள்ள நிலையிலும் சுரேஷ், வேலூரை சேர்ந்த குளோபல் ஐயப்ப பக்தர்கள் சேவை குழு உதவியுடன் 70 நாட்களுக்கு முன்பு நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். செம்பட்டி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஊன்றுகோல்கள் உதவியுடன் நேற்று முன்தினம் நடந்து வந்த சுரேஷிடம் சபரிமலை பயணம் குறித்து கேட்டபோது, ‘‘வேண்டுதலை நிறைவேற்ற முன்கூட்டியே ஆந்திராவிலிருந்து கிளம்பி விட்டேன்.

எனது நண்பர்கள் டிசம்பர் 2ல் பாதயாத்திரை துவங்கி 19ம் தேதி சபரிமலை வருகிறார்கள். நான் மாற்றுத்திறனாளி என்பதால், என்னால் அவர்களுக்கு சிரமம் வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே பாதயாத்திரை கிளம்பினேன். எனக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த குருசாமி செந்தில் என்பவர் சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்’’ என்றார்.

Related Stories: