புயல் நிவாரண முகாம்களில் அரசு எந்த உதவியும் செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை சைதாப்பேட்டை அரசு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 பேருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நிவாரண உதவிகளை வழங்கினார். நிவாரண முகாமில் இருந்தவர்களிடம் குறைகளை கமல்ஹாசன் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலை நினைத்தாவது மக்களுக்கு அரசு உதவி செய்ய முயற்சி செய்ய வேண்டும். கஜா புயலுக்கான நிவாரணமே இன்னும் வழங்கப்படவில்லை. நாங்கள் அரசாங்கம் கிடையாது. எங்களிடம் கஜானா இல்லை. தனி இயக்கம் என்பதால் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.

வெள்ளம் வருவதற்கு அரை மணி நேரம் முன்புதான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரி பகுதிகளில் 50 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை அரசு வழங்க வேண்டும். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை. நிவாரணம் என்பது இந்த வருடத்துக்கானது. இப்போதே முடிவு செய்து நிரந்தரமான நிவாரணம் அளிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்கள் தராததால் ஆண்டுதோறும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விளம்பர பலகைகள் விழுந்து ஏற்படும் மரணம் இன்னமும் தொடர்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Related Stories: