நிவர் புயல் கரையை கடந்தபோது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை 101 வீடுகள் சேதம் அடைந்தது: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை:  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  நிவர் புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் புதுச்சேரிக்கு அருகாமையில் கரையை கடந்தது. அதற்கு பிறகு நிவர் புயல் படிப்படியாக வலு இழந்துள்ளது. நிவர் புயலால் பாதிப்புக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மீட்புப்படையின் 15 குழு மற்றும் இந்திய ராணுவத்தின் 14 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. நேற்று காலை நிலவரப்படி 15 மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளில் வசித்து வந்த 92,132 ஆண்கள், 93,380 பெண்கள் மற்றும் 39,886 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,25,398 பேர் 3,042 தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததால், 140 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக காற்று வீசியபோதும் பெரிய அளவில் உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லை. நிவர் புயல் கரையை கடந்தபோது மின்சாரம் தாக்கியோ, மின்னல் இடி தாக்கியோ எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் திருவல்லிக்கேணியில் மரம் விழுந்து ஒரு உயிரிழப்பும், திருவள்ளூரில் மண் சுவர் சரிந்து விழுந்து இறந்த சம்பவம் மட்டுமே நிகழ்ந்துள்ளது. நிவர் புயலால் 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதது. ஆடு, மாடு என 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக இதுவரை தகவல் கிடைத்துள்ளது.

அதேபோன்று கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 380 மரங்கள் விழுந்துள்ளது. அந்த மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டது. தமிழக மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை தொடரந்து கண்காணித்து வருகிறோம். 

Related Stories: