நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ பதிவு விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணனிடம் 5 மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை: அறிக்கையை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க முடிவு

சென்னை: நீதிபதிகளின் குடும்பங்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்த விவகாரத்தில், முன்னாள் நீதிபதி கர்ணனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.சென்னையை சேர்ந்த முன்னாள் நீதிபதி கர்ணன். இவர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்குவங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவர் யூ-டியூபில் பதிவு செய்த வீடியோ பதிவில், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் குறித்தும், பெண் வழக்கறிஞர்கள் குறித்தும் அவதூறான சில கருத்துக்கள் பேசி வீடியோ பதிவு செய்திருந்தார். இதுகுறித்து, தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வீடியோ பதிவுடன் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணன் பேசிய வீடியோ பதிவை ஆய்வு செய்தனர். அப்போது, நீதிபதிகள் குடும்பங்கள் பற்றியும், பெண் வழக்கறிஞர்கள் குறித்து அவதூறாக பேசியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சட்ட நிபுணர்கள் ஆலோசனை அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்னாள் நீதிபதி கர்ணன் மீது கடந்த மாதம் 27ம் தேதி ஐபிசி 153, 509 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.ஆனால் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 30 தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகி வீடியோ பதிவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

அந்த சம்மனை தொடர்ந்து முன்னாள் நீதிபதி கர்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை 10.15 மணிக்கு வந்தார். பிறகு விசாரணை அதிகாரியான மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் துரை முன்பு 10.30 மணிக்கு ஆஜரானார். அப்போது, விசாரணை அதிகாரி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முன்னாள் நீதிபதி கர்ணன் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை விசாரணை அதிகாரிகள் வாக்கு மூலமாக பதிவு செய்தனர். 5 மணி நேரம் நடந்த விசாரணை மாலை 3.30 மணிக்கு முடிந்தது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நீதிபதியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Related Stories: