நிவர் புயல் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை செயலர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நிவர் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அரசு மருத்துவமனையை தமிழக சுகாதார துறை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலானது மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரை கடக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்தது. பின்னர் புதுச்சேரி அருகே நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காற்று வீசும்போது பொதுமக்கள் எதாவது விபத்தில் சிக்கினால் தங்க வைத்து அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்க என்னென்ன அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மருத்துவர்களுக்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். இதேபோல் எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு சமுதாய நலக்கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், தாசில்தார் பர்வதம், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, செங்கல்பட்டு அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: