பண்ருட்டி ஏரி உடைந்தது அதிகாரிகள் அலட்சியத்தால் தண்ணீர் வீணானது

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் காரந்தாங்கல் ஏரி உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுபாட்டில் உள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு இந்த ஏரியில் இருந்து நீர்பாசனம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஏரி கரையை ஒட்டி ராட்சத ஆயில் பைப் புதைக்கபட்டுள்ளது. இதனால் கரை பலவீனமாக இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பண்ருட்டி காரந்தாங்கல் ஏரி நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு ஆயில் பைப் புதைக்கபட்ட பகுதியில் கரை திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடைப்பை சரி செய்ய முயற்சி செய்தனர். ஆனால் உடைப்பு ஏற்பட்ட கரையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறியது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கபட்டது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, இதனையடுத்து நேற்று காலை அதிகாரிகள் வந்து ஏரியை பார்வையிட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் கரையை சீரமைத்தனர். ஆனால் அதிகாரிகள் வந்து ஏரியை சீரமைப்பதற்குள் தண்ணீர் முழுமையாக வெளியேறி வீணானதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். 

Related Stories: