நிவர் புயலால் கடல் கொந்தளிப்பு: கடலோர கிராமங்களில் ஊருக்குள் நீர் புகுந்தது: மக்கள் வெளியேற்றம்

கடலூர்:  நிவர் புயல் தாக்கம் காரணமாக கடலூரில் கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்ப ஏற்பட்டு. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. கடலூர் மாவட்டத்தில் 49 கடற்கரை கிராமங்கள் உள்ளன. நிவர் புயல் காரணமாக  நேற்று காலை முதல் அனைத்து கடலோர கிராம மக்களும் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையே பிற்பகல் முதல் நிவர் புயலின் தாக்கம் காரணமாக கடலூர் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடல் அலைகள் ஐந்து மீட்டர் உயரத்துக்கு மேல் எழுந்து ஆர்ப்பரித்தது.

இதற்கிடையே சொத்திகுப்பம், ராசாபேட்டை,  புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் கரையோர  பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் புகுந்தது. இதைதொடர்ந்து மீனவர்கள் அச்சமடைந்தனர். மேலும் கடல் கொந்தளிப்பை தொடர்ந்து கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகள் அனைத்தும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு கிராமத்திற்குள் இழுத்து வரப்பட்டு பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டது.

கடலோர காவல்படை ரோந்து

புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலோர காவல் படை எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலோர காவல் படை எஸ்பி சின்னசாமி மேற்பார்வையில் 32 கடலோர காவல்படை வீரர்கள் பல்வேறு அதிநவீன ஆயுதங்களுடன் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இதேபோன்று சம்பந்தப்பட்ட காவல் சரக போலீசார் பத்து கிலோமீட்டருக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு முகாம்களிலும் கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர்.

Related Stories: