டிச.1ம் தேதி டாஸ்மாக் பார்களை திறக்காவிட்டால் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்: பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 1ல் டாஸ்மாக் பார்களை திறக்க அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, தொழில்சாலைகளும், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவைகளை படிப்படியாக அரசு திறந்தது. ஆனால், டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், பார்களை திறக்க அனுமதி வழங்கக்கோரி அரசுக்கு பார் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்தித்து பார்களை திறக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது: டாஸ்மாக் பார்கள் கடந்த 8 மாதங்களாக மூடிக்கிடப்பதால் கட்டிட உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். கட்டிட உரிமையாளர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பல உரிமையாளர்கள் கடன் வாங்கி வாடகையை செலுத்தி வருகிறோம். ஏற்கனவே, பிளாஸ்டிக் தடை காரணமாக பார் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் 8 மாதம் எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் இருக்கிறோம். ஏற்கனவே, மே, ஜூன் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் டாஸ்மாக் நிர்வாகத்திடம் நேரடியாக மனு கொடுத்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட்ட பிறகு பார்களை திறக்க மட்டும் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.

எனவே, பார் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி டிசம்பர் 1ம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இல்லை என்றால் அமைச்சர் தங்கமணி வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: