சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர்’ புயலை எதிர்கொள்ள தயார்: பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சென்னை, எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பருவமழையை எதிர்கொள்ள 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அது மேலும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இது புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும். அப்போது 80 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது கனமழை, மிக கனமழை, அதிக கனமழை இருக்கும். சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தயார் நிலையில் உள்ளது.

தற்போது 6 தேசிய பேரிடர் மீட்பு படை கடலூர் சென்றுள்ளது. 2 பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் உள்ளனர். புயல் நகரும் பாதையை கவனித்து வருகிறோம். `நிவர்’ புயல் காரணமாக பெய்யும் தொடர் மழை, புயல் காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முன்னெச்சரிக்கை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  ஏரிகளில் கரை உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய்கள், பாலங்கள் அடைப்பை சரி செய்ததை துறை அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களில் உள்ளவர்கள் அரசு முகாமுக்கு வர வேண்டும். இடி, மின்னல் வரும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது. பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், நீர் செல்லும் பாதைகள், கடற்கரை பகுதிகளில் சிறுவர்களை, குழந்தைகளை அனுமதிக்க கூடாது. புயல் தாக்கும் பகுதிகளில் மீட்பு படையினர் உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புயல் குறித்து அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: