மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் முன்பு கொரோனா தடுப்பு தற்காலிக ஊழியர்கள் தர்ணா போராட்டம்: 2 மாதமாக சம்பளம் இல்லை என புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பவவியது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முககவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதையொட்டி, தன்னார்வலர்களும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மேலும், மகளிர் திட்டம் சார்பில் சுமார் 150 தற்காலிக ஊழியர்களை தேர்வு செய்து, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோன தடுப்பு பணிக்காலம் முடிவடைந்து 2 மாதங்களாக, அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என புகார் கூறுகின்றனர். இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் தற்காலிக ஊழியர்கள் கேட்டபோது, உங்களை நியமித்தது மகளிர்திட்டம் தான், அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 40 பேர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் முன்பு நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சீனிவாச ராவ், அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

* பணியில் இறந்த ஊழியர்

காஞ்சிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட திருக்காளிமேடு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் இறந்தார். அவருக்கும் ஊதியம் வழங்கப்படாததால், அவரது தாயும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார்.

Related Stories: