‘நிவர்’புயல் பெயர் வந்தது எப்படி?

சென்னை: வங்கக் கடலை உள்ளடக்கிய வடக்கு இந்திய கடல் பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டு வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழைக் காலங்களில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் வானிலை ஆய்வில் ஈடுபட்டு வரும் நாடுகளிடையே உள்ளது. இதையடுத்து, வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து மேற்கண்ட கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டின. இந்த பட்டியலில் 64 பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இந்த பட்டியலில் கடைசியாக இடம் பெற்றுள்ள புயலின் பெயர் ஆம்பன். இதற்கு பிறகு பெயர் வைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது 2020ம் ஆண்டு முதல் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டபட்டுள்ளன.

இந்த பட்டியலில் உறுப்பினர்களாக வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் சார்பில் 172 பெயர்கள் புயலுக்கு சூட்டபட்டுள்ளன. கடந்த முறை மேற்கண்ட கடல் பகுதியில் உருவான புயலுக்கு இந்த புதுப்பட்டியலில் இருந்து தான் பெயர் சூட்டப்பட்டது. அந்த பெயர்தான் ‘நிசர்கா’. அதற்கு பிறகு இந்த ஆண்டில் தற்போது வங்கக் கடலில் புயல் உருவாகி வருகிறது. இது புயலாக மாறினால் இதற்கு ‘நிவர்’என்று பெயர் வைக்க வேண்டும் என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள நிவர் என்ற பெயரை ஈரான் நாடு சூட்டியுள்ளது.

Related Stories: