காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து  குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் நவம்பர் 21ம் தேதிமுதல் டிச.10ம் தேதிவரை பள்ளி செல்லா,  இடைநின்ற குழந்தைகள் (6-18 வயது) மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை(0-18 வயது) பள்ளித்  தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.  

 

இக்கணக்கெடுப்புப் மூலம் கண்டறியப்படும் குழந்தைகள் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்களிலும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களிலும் பள்ளிகளின் நேரடி சேர்க்கை மூலம் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படு்.  முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் கல்வி மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கொரோனா சார்ந்த முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவும், இப்பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: