118.9 கி.மீ தூரம் கொண்ட இரண்டாம் கட்ட பணி சூடுபிடிக்கும் மெட்ரோ ரயில் திட்டங்கள்: தினமும் 25 லட்சம் பேர் பயணம் செய்யலாம்; 2026ல் பணிகளை முடிக்க திட்டம்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அடிக்கல் நாட்டிய 118.9 கி.மீ தூரம் கொண்ட 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நாள் தோறும் 25 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். சென்னையில் தற்போது 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் முதல் வழித்தட திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேற்று 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: மத்திய அரசு, தமிழக அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 118.9 கி.மீ நீளத்தில் மூன்று வழித்தடங்களுடன் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரம் முதல் சிப்காட் வரையிலான 3வது வழித்தடம் 45.8 கி.மீ நீளம் கொண்டது. இது அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைப்பதுடன் 50 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளடக்கியது. இதில், 20 நிலையங்கள் உயர்மட்டமாகவும், 30 நிலையங்கள் சுரங்கப்பாதையிலும் அமைய உள்ளது. இதேபோல், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 4ம் வழித்தடம் 26.1 கி.மீ நீளம் கொண்டது. சென்னையில் வணிக பகுதிகளான நந்தனம், தி.நகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் மற்றும் பூந்தமல்லியை இணைப்பதுடன் மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளிடக்கியது. இதில், 18 நிலையங்கள் உயர் மட்டத்திலும், 12 நிலையங்கள் சுரங்கப்பாதையிலும் அமைய உள்ளது.

5வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ தூரத்தில் அமைய உள்ளது. இது வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் ஆகியவற்றை இணைக்கிறது. இதில், மொத்தம் 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் வருகிறது. 42 நிலையங்கள் உயர்மட்டமாகவும், 6 நிலையங்கள் சுரங்கப்பாதையாகவும் அமைய உள்ளது. மேலும், இரண்டாம் கட்ட திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு இந்த மூன்று வழித்தடங்களையும் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக முடிவதன் மூலம் சென்னை நகரம் 173 கி.மீ நீளத்திலான மெட்ரோ ரயில் வழித்தடப்பகுதிகளுடன், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். இது பொது போக்குவரத்து பயணங்களில் 25 சதவீத அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவை, நகரப்பேருந்து சேவை, துரிதப்போக்குவரத்து அமைப்பு ஆகியவற்றுடன் 21 வெவ்வேறு இடங்களில் சிரமங்கள் இன்றி எளிதாக மாறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

* முதல் கட்டத்தில் பச்சை, நீல வழித்தடம்

சென்னையில் தற்போது பச்சை மற்றும் நீலமாக அறிவிக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கி.மீ தூரத்திற்கு நீட்டிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

2ம் கட்ட மெட்ரோ ரயிலின் சிறப்பு

* சென்னை நகரில் ரூ.61,843 கோடியில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாக மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தின் 2ம் கட்டம் இருக்கும்.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் 118.9 கி.மீ.தூரத்துக்கு ரயில்கள் இயக்கப்படும்

* சென்னைக்குள் பொதுமக்கள் விரைவில் வருவதற்கும் அதேபோல குறிப்பிட்ட இடத்துக்கு செல்லவும் மூன்று வழித்தடம் அமைக்கப்படும். அவை மாதவரம்- சிப்காட், லைட்ஹவுஸ்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர்.

* 2ம் கட்டத்தில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும். இதில் 21 ரயில் நிலையங்கள் அருகில் பஸ் மற்றும் மின்சார ரயில்களை எளிதில் பொதுமக்கள் அணுகும் வகையில் அமைக்கப்படும்.

* சென்னையின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளான அடையாறு, மயிலாப்பூர், நந்தனம், தி.நகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் பகுதியை இணைக்கிறது.

* மெட்ரோ ரயில் திட்டம் 1 மற்றும் 2 முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் ரயில் இயக்கப்படும் தூரம் 173 கி.மீட்டராக அமையும்.

Related Stories: