வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்: டிசம்பர் 12, 13ம் தேதியும் நடைபெறுகிறது

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் மேற்கொள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நேற்று 2வது கட்ட சிறப்பு முகாம் நடந்தது. மேலும் அடுத்த கட்ட முகாம் டிசம்பர் 12, 13ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில், கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370 பேர், பெண்கள் 3,09,25,603 பேர், மூன்றாம் பாலினத்தவர் 6,385 பேர் ஆகும். 1.1.2021ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக, நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதி ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், அப்போது நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் முதல் மற்றும் 2வது கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இந்த  சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிறப்பு முகாமில் அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். சென்னை மாநகராட்சியில் 900 வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 3ம் கட்ட சிறப்பு முகாம் டிசம்பர் 12ம் தேதியும், 4வது கட்ட சிறப்பு முகாம் டிசம்பர் 13ம் தேதியும் நடைபெறுகிறது.

Related Stories: